Check your 12th results


பின்தொடர 50+ பேர் தயார் - ட்விட்டருக்கு வாங்க...

@bharathiee
140 வார்த்தைகளுக்குள் இந்த 'உலகத்தை' வார்த்தைகளில் அடக்க முடியுமா உங்களால்? முடியும் என்றால் உங்களுக்காக இடம் டிவிட்டர் தான்..


வெறும் இரண்டு வரிகளில், அட்டகாசமாக எழுதி, "என்னாமா யோசிக்கறாங்க" என என்னை அச்சர்யப்படுத்தியவர்கள் ட்விட்டர் உலகில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.


எந்நாளும் ஒரு கல்லூரி வளாகத்திற்குள் இருக்கும் உணர்வுதான் டிவிட்டரில் இருக்கும் பொழுதெல்லாம் உண்டாகிறது. சிபி ராஜின் ஜீன்ஸை மாட்டிக்கொண்டு திரியும், பல சத்தியராஜ்-களும் கலாய்ப்பு பணிக்காக களத்தில் இருப்பார்கள் என்பது வேறு விஷயம்.


கலாய்ப்பு மட்டுமல்ல, கதை, கவிதை, இலக்கியம், விளையாட்டு என ட்விட்டர்வாசிகள் தொடாத எல்லைகளே இல்லை.


ஆனந்த விகடனின் வலைபாயுதே பார்த்து, தாமும் அதைப் போல் எழுத வேண்டும் என்று ட்விட்ட்ருக்கு வருபவர்களின் எண்ணிக்கை
இப்போது மிக அதிகம். ஆனால் ட்விட்டரில் அதை விட, அசத்தலான எழுத்துகள், யோசிப்புகள், கலாய்ப்புகள் உண்டு.


அதிக அளவு பாலோயர்ஸ் வைத்திருப்பது தான், ட்விட்டரில் பெருமையாக கருதப்படுகிறது. ஏனெனில் உங்கள் எழுத்துகள் உங்கள் பாலோயர்களின் டைம் லைன் வழியே ஓடி, அவர்களின் கவனத்தை ஈர்க்கும்.


நிறைய பாலோயர்ஸ் இருந்தால், நிறைய பேரை சென்றடையும் - சிம்பிள் லாஜிக். அப்புறம் ஆயிரம் பாலோயர்ஸ்- க்கு மேல் இருந்தால், அதில் யாரோ சிலருக்காவது உங்கள் எழுத்து மிக பிடித்திருக்கும்.


உங்கள் எழுத்து பிடித்திருந்தால், அதனை அவர்கள் RT செய்வார்கள்.


RT (Retweet) என்பது உங்கள் ட்விட்டை, அவர்களின் பாலோயர்களுக்கு பரிந்துரை செய்வது... (ட்விட் மிக பிடித்திருந்தால் அவர்கள் உங்களை நேரடியாக பாலோ செய்வார்கள்)


ட்விட்டருக்கு வரும் ஆரம்ப நாள்களில் வெறும் ஆர்.டி. மட்டும் செய்து, நன்றாக எழுதுபவர்களின் கவனத்தை ஈர்ப்பவர்கள் ஏராளம்.


ஆர்.டி. மட்டுமே செய்து, கிட்டத்தட்ட மூவாயிரம் பாலோயர்ஸ் ஒருவர் வைத்திருக்கிறார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
பதிவுலகம், முகப்புத்தகம் என எந்த இணைய உலகத்தை எடுத்துக்கொண்டாலும், மிக தீவிரமாக இயங்குபவர்கள் என ஆன்லைனில் அதிக நேரம் இருப்பவர்கள் என சில சொல்ல முடியும். எழுதுவதும், எழுதுபவர்களுக்கு பாராட்டுவதும் இவர்களோ தான் அதிக அளவில் செய்து கொண்டிருப்பார்கள். அது மாதிரி, ட்விட்டரிலும் உண்டு.


எப்போதும் ட்விட்டரின் டைம்லைனில் தென்படுபவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களை பாலோ செய்யுங்கள்.(கீழே இருக்கும் பட்டியலில் அவர்கள் பெயர்களும் இருக்கின்றன., அவர்களை தொடர்க...)


நீங்கள் பாலோ செய்தால், உங்களை திரும்பவும் ஃபாலோ பேக் செய்ய, உங்கள் எழுத்துகளை ஆர்.டி. செய்ய கீழ்கண்டவர்களை பாலோ செய்யுங்கள். (இனி ட்விட்டரில் நீங்கள் தனி ஆள் இல்லை.)

விகடன் பாணியில் வலைபாயுதே - கலக்கல் ட்விட்டுகளின் தொகுப்பு...

பாரத்...பாரதி...

 "நன்றி" காய்ச்சல்ன்னு ஒன்னு வந்தா அது சரத்குமாருக்கு தான் முதல்ல வரும்!!


   இந்த உலகம் எவ்ளோ அமைதியானது என்பது பொதிகையில் செய்திகள் பாக்கறப்பதான் தெரியுது..


  நல்லவேளையாக இரும்பு வில்''லை காமனின் ஆயுதமாக வைக்கவில்லை..கரும்புவில்''லுக்கே இவ்வளவு சேதாரம்


   மீண்டும் குழந்தைப்பருவதிற்கு போக ஆசைபடுபவர்கள், ஒரு முறை உங்கள் குழந்தையின் HOMEWORK டைரியை பார்த்துவிடுங்கள்.!!!


  செவ்வாய்கிரகம் அளவுக்கு தூரமா இருந்தாலும், சொந்தவீடு வாங்கிடனும்ங்கற வெறியை நமக்கு வரவைக்கிற பெருமை வீட்டுஓனர்களையே சேரும். 


  ஒவ்வொரு தமிழக கல்யாணத்திலும் பழைய பகைகள் பைசல் செய்யப்பட்டு, புதிய பகைகள் பிரசவிக்கப்படுகின்றன.


   கோடை விடுமுறையிலும் குழந்தைகளை ஏதாவது சம்மர் கோர்ஸில் தள்ளினால் அவர்கள் உங்களை முதியோர் இல்லத்தில் தள்ள கூடும்.


  சிலுவை சுமக்க தயாராயிருந்தால் மட்டும்தான், செத்தும் பிழைக்கக்கூடிய வரம் கிடைக்கும்.! #ஈஸ்டர்
பாரத்...பாரதி...
  தங்கள் குழந்தைகள் புத்திசாலிகள் என்று நிரூபிக்க பெற்றோர்கள் குட்டிகரணம் கூட அடிப்பார்கள் போல.


  யாரும் துரோகம் இழைப்பதில்லை! அவர்களை எவ்விடத்தில் வைக்க வேண்டும் என்பதை இலைமறைகாயாக உணர்த்துகிறார்கள்!


  இரவை இழுத்து போர்த்திக் கொண்டு உறங்கும் பகலின் கால்கள் தெரிகிறது நிலவாய் !


  எல்லோரும் பினாமி பேர்ல சொத்து வச்சிருப்பாங்க, ஆனா அதிமுக -ல மட்டும் தான் பினாமி பேர்ல கட்சியே வச்சிருக்காங்க # ச. ம. க.


 மாசக்கடைசி என்பது இரண்டாம் தேதியிலிருந்து துவங்குவதாய் சொல்கிறது ஆண்களின் வரலாறு..!


   கடவுள் பாரபட்சமில்லாதவர்தான்.... சிறப்பு தரிசன சீட்டு பெற்றவருக்கும் சிலையாகவேதான் காட்சி அளிக்கிறார்


  எந்த கோவிலிலும் கண்டதில்லை உண்டியலுக்கு முன் கடவுளை.....!


 " விரும்பி சுமந்த சிலுவை இயேசுநாதரை உருவாக்கலாம். திணிக்கப்பட்ட சிலுவைகள் பிரபாகரன்களைதான் உருவாக்கும். ""
பாரத்...பாரதி... ‏
  பாட்டுல பின்னாடி டான்ஸ்தான் ஆடுவாகனு பார்த்தா இந்த கெளதம்மேனன் எடுக்குற பாட்டுல பூராம் பின்னாடி பல்டி அடிச்சுகிட்டு கெடக்காய்ங்க


  டைம்பாம் வச்ச வீட்ல இருக்க மாதிரி ரசிக்கிறேன் வாழ்க்கையை.8.15- 9.00 மின் தடை ஓவர்.அடுத்து 9.45




  நல்லா படி என்று மகனிடம் அட்வைஸ் செய்தால், என் 10th மார்க் லிஸ்ட் கேட்கிறான் :( 
  
 http://bharathbharathi.blogspot.com

உலக இலக்கியங்கள் தோற்றோட வேண்டும்..


bharath...bharathi..
இப்போதைய பயணங்களில் எல்லாம்; மீதி கட்டப்படாமல், பாதியில் நிற்கும் கட்டிடங்கள் அதிகம் பார்க்க நேரிடுகிறது. உள்ளுக்குள் இனம் புரியாத அழுத்தம் மனசுக்குள் குடிகொள்கிறது.

வண்ணத்துப்பூச்சியாக உருமாற்றம் கொள்ள இயலாது, பாதியில் மரித்து போகும் கூட்டுப்புழுக்கள் போல, வீடு என்னும் அந்தஸ்து பெறாமல் மரித்துப்போகும் கட்டிடங்கள் ஏராளம்.

பணம், ஆட்கள் தகராறு, வடிவமைப்பு குழப்பம்(வாஸ்து),
இன்னும் ஏதோ வெளியே சொல்ல முடியாத காரணங்களால், கட்டிடங்கள், வீடாக பரிமாண மாற்றம் கொள்ள இயலாமல் நிற்கின்றன.

தயங்கி, தயங்கி நின்றதால், சொல்லாத காதலாக நீர்த்துப்போன, தோற்றுப் போன காதல்காரர்கள் இங்கே ஏராளம்.

காதல் தடுக்கி விழுந்தவர்களை விட, கட்டிடம் தடுக்கி விழுந்தவர்கள் எண்ணிக்கை இந்த தேசத்தில் மிக அதிகம்.
bharath...bharathi..

பாதியில் நிற்கும் வீடுகளின் முகப்புகளில், வாரப்படாத தலையோடு, ஒரு வார தாடியோடு, சற்றே கனந்த சிந்தனையோடு நிற்க்கும் மனிதரிடம் பேசிப்பாருங்கள். வாழ்க்கையின் அத்துணைச் சொல்லும் அர்த்தம் அவரிடம் இருக்கும்.

"அட... போன மாசம் கூட கேட்டு இருக்கலாமே? இப்ப பாருங்க கையில சுத்தமா காசு இல்லை"

"அட... போங்கண்ணே.. நானே உங்ககிட்டே கேட்கலாமுன்னு இருந்தேன்.."

"நீங்க காசு கொடுங்க சார்..., அடுத்த நாள்ல இருந்து, நிறுத்துன வேலையை ஆரம்பிச்சுடலாம்..."

"அப்பா.. நாம எப்ப புது வீட்டுக்கு போவோம்.. என்னோட பிரண்ட்ஸ் - கிட்ட எல்லாம் சொல்லி வெச்சுட்டேன்.."

"என்னங்க.., இந்த நகையை வெச்சு ஏதாச்சும் பண்ண முடியுமா?"

உலக இலக்கியங்கள் தோற்றோட வேண்டும், இந்த உரையாடல்களின் பின், முன் நிகழ்ந்தவைகளை யூகிக்க முடிந்தால்...
bharath...bharathi..
"கல்யாணம் பண்ணிப்பார்.. வீட்டை கட்டிப்பார்.."

"ஏதேனும் தடங்கல் வந்து விடுமோ" என்ற கவலையோடும், தவிப்போடும் யாரோ ஒருவர் நடமாடிக்கொண்டே இருப்பார்.., எல்லா புதுமனை புகுவிழா, திருமண விழா நிகழும் எல்லா இல்லங்களிலும்..., விழா நிகழும் நாளின் முந்திய இரவில் கூட...

எல்லா வீட்டின் சுவர்களிலும், பல உயிர்களின் வேதனை குழைத்து பூசப்படுகின்றன. சுவர்களின் வனப்புமிக்க, வண்ணங்களைத் தாண்டி, உணர்வு துடிப்பை எல்லோராலும் உணர்ந்து கொள்ளமுடிவதில்லை..

என்னால் ஏதும் செய்ய இயலாது என்றாலும் கூட, இதழ்கள் வழி நம்பிக்கையூட்டுகிறேன்..

உள்ளுக்குள் பிரார்த்திக்கிறேன்.. எங்கேனும் பாதியில் நிற்கும் கட்டிடங்களைப் பார்க்கும் போது,  பாதி பேச்சுவார்த்தையில் திருமணம் தடைப்பட்டு நிற்கும் பெண்களைப் பார்க்கும் போதும்.



பலரால் கண்டு கொள்ளப்படத முந்தைய பதிவு:
எஸ்.ராமகிருஷ்ணனின் ஈர்ப்பியல் - வழி விகடன் தீபாவளி மலர்.

எஸ்.ராமகிருஷ்ணனின் ஈர்ப்பியல் - வழி விகடன் தீபாவளி மலர்.


bharathbharathi

அது என்னவோ எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகளில் வரும் மனிதர்கள் ரொம்ப நாள் பழகியது போல, மனதில் பச்சக்-கென்று ஒட்டிக்கொள்கிறார்கள். இது துணையெழுத்து முதல் கொண்டு நிரூபணமாகி கொண்டே இருக்கிறது. அவரின் உபபாண்டவம், நெடுங்குருதி எல்லாம் எப்படி என்று தெரியவில்லை. விகடன் வழி வாசித்த அனைத்திலும் எஸ்.ரா.வின் கதை மாந்தர்கள் மனதை ஈர்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.

வழக்கமா அவரின் எழுத்துகளை படிக்கும் போது, "இவையெல்லாம் உண்மையாகவே நடந்திருக்குமா, இல்ல வெறும் புனையப்பட்டவையா?" என்ற எண்ணம் மனதில் எழுந்து கொண்டே இருக்கும். ஆனால் முதல் முறையாக சிறுகதை-னு சொல்றாங்க ஆனா உண்மை சம்பவம் மாதிரி இருக்குதே அப்படினு ஆச்சர்யப்படவைத்தது, விகடன் தீபாவளி மலரில் வந்த (நடிகை அனுஷ்கா முகப்பு அட்டையில்) "கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது" என்ற சிறுகதை.
நிச்சயமா இனி எப்போதும் கோகிலவாணியை எனக்கு மறக்காது, அப்படி மனதில் பதியவைத்துவிட்டார் எஸ்.ரா.
bharathbharathi

கதை என்பது இது தான், மிக அழகு என்று சொல்லமுடியாத, கருத்த தேகமுடைய கோகிலவாணி, தன்னுடைய பதினைந்தாவது வயதிலேயே, காதலிப்பது பற்றிய கற்பனைகளை மனதில் புகுத்திக்கொண்டு, காதலிக்கப்படுவதற்காகக் காத்துக்கொண்டே இருக்கிறாள். நீண்ட காலம் காத்திருந்து, கற்பனைக் காதலனோடு கொஞ்சி குலாவினாலும், யாரும் அவளை காதலிப்பதாக இல்லை.

காதலிப்பது மட்டுமே தன்னுடைய வாழ்க்கையின் பற்றுக்கோல் போல நினைத்துக்கொண்டிருந்த அவளின் வாழ்க்கையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு வரும் மகேஷை, தன்னுடைய காதலனாக வரித்துக்கொள்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாய் மகேஷின் அன்பை தன்வசப்படுத்திக்கொண்டிருக்கும் போது, அவள் வாழ்க்கையில் துரை குறுக்கிடுகிறாள்.

தன்னை காதலிக்க வேண்டும் என கோகிலவாணியை கட்டாயப்படுத்துகிறான் துரை. அடுத்தடுத்த நிகழ்வுகளில் அவள் துரையை மறுத்தளிக்க, ஒரு கட்டத்தில் கடுப்பில் துரை அவள் முகத்தில் ஆசிட் ஊற்றிவிடுகிறான்.

பின்னர் பல பிரச்சனைகளுக்கு இடையே வழக்கு நடந்து, முடிவில் துரை தண்டிக்கப்படுகிறான். இடையில் நமக்கு இதெல்லாம் ஒத்துவராது என மகேஷும் கழண்டு கொள்ள, தனிமரமாக மாறுகிறாள் கோகிலவாணி.

குடும்பமும் தூற்றி, விலக்கி விட்டநிலையில், ஆசிட் வீசப்பட்ட முகத்தோடு, உபாசனா என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்கிறாள்.

"எதற்காகக் காதலிக்க ஆசைப்பட்டோம், காதல் என்பது இது தானா?'
"ஏன் துரை இப்படி தன் முகத்தில் ஆசிட் ஊற்றினான்?"
"தன் காதலை உலகம் ஏன் ஏற்கமறுத்தது? எதற்காக தனக்கு இவ்வளவு குரூரமான தண்டனையை வழங்கப்பட்டது? என்ற கேள்விகளோடு விடையில்லாது நீள்கிறது கோகிலவாணியின் வாழ்வு.
bharathbharathi
இந்த கதை 90களில் நடந்தது போல, எஸ்.ரா. காட்டியிருக்கிறார், ஏனெனில் காதலிக்காத பெண்ணின் முகத்தில் ஆசிட்டை ஊற்றுவது என்பது அப்போது தான் கலாச்சாரமாகவே இருந்தது என்று கூறலாம்.

தன் மீது ஆசிட் ஊற்றப்பட்டது மற்றவர்களைப் பொறுத்தவரை; சின்னஞ்சிறு நிகழ்வாக மாறிவிட்டாலும், தன்னுடைய தந்தை, அண்ணன்; ஏன் மருத்துவம் பார்க்கும் பெண் மருத்துவர், வழக்கில் ஆஜராகிய வக்கீல் என அனைவராலும் கேவலப்படுத்தப்படும் கோகிலவாணி, ஒரு நாள் தன் மீது ஆசிட் வீசிய துரையை கடற்கரையில் அவன் மனைவி மற்றும்  குழந்தையுடன் பார்க்கிறாள்.

கோகிலவாணியைப் பார்த்தவுடன், மனைவிடம் ஏதோ சொல்லியவாறு அந்த இடத்திலிருந்து கிளம்பிவிடுகிறான் துரை. கண்ணில் இருந்து துரை மறையும் வரை அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

கடற்கரையெங்கும் அப்போது கூட காதலர்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. இவர்களில் ஏதோவொரு பெண் தன்னைப்போல்
முகம் எரிந்து போகக்கூடும். அல்லது வன்கொலை செய்யப்படப்படவும் கூடலாம். வசை, அடி, உதை, எரிப்பு, கொலை இவைதான் காதலின் சின்னங்களா? காதல் வன்முறையில் தான் வேர் ஊன்றியிருக்கிறதா? என நிர்கதிக்கு உள்ளாகிய கோகிலவாணியின் எண்ணவோட்டமாய் வெளிப்படுகிறார் எஸ்.ரா.

இந்த கதையில் வருவது போல் இல்லாமல், ஒரு வேளை மகேஷ்-க்கு முன்பாக துரையை அவள் பார்த்திருந்தால் , துரையைக் காதலிக்கத் தொடங்கியிருப்பாள் என்பது தான் உண்மை. ஏனெனில் யாரோ ஒருவரை காதலித்தே ஆக வேண்டும் எனபதைத் தான் வாழ்நாள் லட்சியமாக கொண்டவளாக சிறுவயதில் இருந்தே கற்பனைக்கோட்டை கட்டியவள் தானே கோகிலவாணி?.
   
இது கோகிலவாணி என்ற ஒரு பெண்ணின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட விஷயமாக நான் கருதவில்லை. இன்றைய சூழ்நிலையில் பருவ வயதின் தொடக்கத்தில் இருக்கும் கிட்டத்தட்ட எல்லா பெண்களும் இந்த மனநிலைக்கு வந்துவிட்டதை மறுக்க முடியாது. பள்ளியில் படிக்கும் சிறுமிகள் கூட காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் தான் தங்களுக்கான சமூக அங்கீகாரமாக நினைக்கத்தொடங்கியிருப்பது உண்மை.

யாரோ ஒருவன் காதலிக்க தேவை என்று நினைப்பவர்கள், மிக மோசமான மனநிலையில் இருப்பவர்களிடம் கிடைத்தால் என்ன ஆவார்கள்; யோசிக்கவே வருத்தமாக இருக்கிறது.

காதலிப்பதற்காகவே கல்லூரியில் படிக்கிறார்கள் எனபது போன்ற தோற்றத்தை முன்பு ஏற்ப்படுத்தி வந்த சினிமா போன்ற மீடியா, இப்போதெல்லாம் பள்ளியில் காதல் வருவது போல காட்டுவது தான், இளம் பிஞ்சுகளிடம் காதலிப்பது மட்டுமே, பள்ளியில் படிப்பதற்கு அர்த்தம் என்ற எண்ணத்தை விதைத்து விடுகின்றன.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஏற்படும் காதல் எனபது தொற்றுநோய் போல, ஒருவர் அதில் பாதிக்கப்பட்டால், கூட இருக்கும் அனைவருக்கும் அது பரவி விடும் அல்லது பரப்பப்படும்.
bharathbharathi
இந்த கதையில் கூட, காதல் பற்றிய கிளர்ச்சிகளை, கோகிலவாணி தன்னுடைய தோழி இந்திராவிடம் பகிர்ந்து கொள்ள, அவளும் காதலுக்கு தயாராகி, பக்கத்து வீட்டில் இருந்த முரளி என்பனிடம் உதட்டைக் கடிக்க கொடுத்துவிடுகிறார். அவன் கணக்கில் காதல் என்பது இப்படியாக இருந்திருக்கிறது.

காதல் என்பது சரியா தவறா என்பது யாரால், யார் காதலிக்கப்படுகிறார்கள்; வாழ்வின் எந்த கட்டத்தில் காதலிக்கப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது.

காதல் எண்ணம் வந்ததே என்பது வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிடுமா என கேட்பவர்களுக்கு இந்த சிறுகதையை படிக்கக்கொடுங்கள். குறைந்தபட்சம் எஸ்.ரா.வின் வார்த்தை விளையாட்டாவது அவர்களைக் கட்டிப்போடும். வாழ்க்கையின் விசித்திரங்கள் எனபது ஏராளம் என்பதும், பால் திரிந்து விடுவது போல அடுத்தடுத்த கணத்தில் வாழ்க்கை சட்டென்று மாறிவிடும் என்பதும் புலப்படும்.


bharathbharathi

எஸ். ராமகிருஷ்ணன் - ஒரு அறிமுகம்.

எஸ். ராமகிருஷ்ணன், விருதுநகர் மாவட்டம் மல்லாங் கிணறு கிராமத்தில் 1966இல் பிறந்தார். முழுநேர எழுத்தாளரான இவர் தற்போது சென்னையில் வசிக்கிறார். சிறுதைத் தொகுப்புகள்: எஸ். ராமகிருஷ்ணன் சிறுகதைகள், நடந்து செல்லும் நீரூற்று. நாவல்: உப பாண்டவம், நெடுங்குருதி, உறுபசி. கட்டுரைத் தொகுப்புகள்: விழித்திருப்பவனின் இரவு, இலைகளை வியக்கும் மரம், என்றார் போர்ஹே, கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி. திரைப்பட நூல்கள்: பதேர் பாஞ்சாலி-நிதர்சனத்தின் பதிவுகள், அயல் சினிமா, உலக சினிமா. குழந்தைகள் நூல்கள்: கால் முளைத்த கதைகள், ஏழு தலை நகரம், கிறுகிறு வானம்.நாடகத் தொகுப்பு: அரவான். நேர்காணல் தொகுப்பு: எப்போதுமிருக்கும் கதை.

எஸ்.ரா.வின் இணையதளம் http://www.sramakrishnan.com/ 

Popular Posts

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்